Thursday, 7 March 2013

என் பெயரை சொல்லி ஏமாத்துறாங்க சொல்கிறார்- சசிகுமார்



இயக்குநர் சசிகுமார் அடுத்து எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லிக் கொண்டு சிலர் ஏமாற்றி வருகிறார்களாம். இது குறித்து தகவல் அறிந்த சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

சினிமா என்னும் பிரமாண்டமான உலகை நோக்கி ஆர்வத்தோடு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்கிற ஆவலில் தவறான ஆட்களை நம்பி சிலர் ஏமாந்து  விடுவது வருத்தமளிக்கிறது.

சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்பு தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப்  பேசுவதுதான் வழக்கம். போனிலோ இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது.

என் பெயரில் போலி இமெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுநாள் வரை சமூக வலைத்தளங்கள் எவற்றிலுமே நான இல்லை. அதனால் சமூக வலைத்தளங்கள், இமெயில்களை வைத்தோ என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

குறிப்பாக சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களா இல்லையோ எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்று நினைப்பவன் நான். ஆனால் என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஏற்கனவே நான் சில நடிகைகளுக்கு என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இருப்பதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பினார்கள். அப்போதே இது குறித்து நான் போலீஸில் புகார் தெரிவித்தேன். தவறான தகவலைப் பரப்பியவர் மீது அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்போது மறுபடியும் கிளம்பி இருக்கும் இந்த மாதிரியான சர்ச்சைகள் குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. என்னால் யாரும் எப்போதும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருக்கும் எனக்கு இத்தகைய சர்ச்சைகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன.

என் விஷயத்தில் மட்டுமல்ல… சினிமாவில் இருக்கும் யாருடைய பெயரை வைத்து வாய்ப்பு தருவதாக யார் சொன்னாலும் தயவு செய்து அது குறித்து தீர விசாரியுங்கள். முடிந்த மட்டும் சம்பந்தப்பட்ட இயக்குநர் அல்லது நடிகரிடமும் நேரடியாகப் பேசி வாய்ப்பு குறித்த விசயம் உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் யாருடைய பெயரை யார் வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய மோசடிகளில் ஒரு போதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். சினிமாவில் பெண்கள் சாதிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது. ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் வேண்டும்.

என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.

நன்றி : TAMIL DIGITAL CIMEMA